

விருதாச்சலத்தை சேர்ந்தவர் தர்ஷினி (வயது 22). இவர் வாழப்பாடியில் அய்யாவுக் கவுண்டர் தெருவில் உள்ள விஜயா என்பவரது வீட்டில் தங்கி, அங்கிருந்து தினந்தோறும் மேட்டுப்பட்டியில் இயங்கும் தனியார் கல்லூரிக்கு சென்று பி.சி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார். அவருடன் அதே கல்லூரியில் படித்து வரும் அவரது தோழியான மற்றொரு மாணவியும் தங்கியிருந்தார்.
நேற்று மாலை கல்லூரியில் இருந்து தங்கியிருந்த வீட்டிற்கு திரும்பிய மாணவி தர்ஷினி, தோழியிடம் சகஜமாக பேசிக்கொண்டு இருந்த நிலையில், இரவு தூங்க சென்றுள்ளார்.
இன்று காலை கல்லூரி செல்வதற்கு புறப்படுவதற்காக பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது தோழி, மாணவி தர்ஷினியை எழுப்ப சென்றார். கதவு தாழிட்டு இருந்தது. வெகு நேரம் கதவைத் தட்டியும் தர்ஷினி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தோழி ஜன்னல் வழியாக பார்த்தபோது, தர்ஷினி துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கியது தெரியவந்தது.
இது குறித்து தோழி வீட்டின் உரிமையாளர் விஜயா மற்றும் வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்த கல்லூரி ஆசிரியர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த கதவை உடைத்து, ஜன்னல் கம்பியில் துப்பட்டாவில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட மாணவி தர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தோழியுடன் தங்கி இருந்த தனியார் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.