காந்தி, நேரு மீது கூட வழக்கு பதியப்பட வேண்டும்: கார்கே தடாலடி

அவர்கள் என்ன புகாரை பதிவு செய்யப் போகிறார்கள்? மகாத்மா காந்தி பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் நாங்களும் பாடினோம்.
கார்கே- சோனியா காந்தி
கார்கே- சோனியா காந்தி
Published on

இந்தியாவின் தேசிய கீதமாக ஜன கண மன உள்ளது. தேசிய பாடலாக வந்தே மாதரம் உள்ளது. தேசிய கீதம் பாடலுக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட வேண்டும். அத்துடன் வந்தே மாதரம் முழுமையாக பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது.

வந்தே மாதரம்

தேசிய பாடலான வந்தே மாதரம் அவமதிக்கப்படுவதை தடுப்பதற்கும், தேசிய கீதத்திற்கும் இணையான சட்டப் பாதுகாப்பை வழங்குவதற்கும் 2026 ஜூலை மாதத்தில் (The Prevention of Insults to National Honour (Amendment) Bill, 2026) என்ற வந்தே மாதரம் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்று சட்டமாகியுள்ளது.

இச்சட்டத்தின் கீழ் இப்பாடலை வேண்டுமென்றே பாடுவதைத் தடுத்தாலோ அல்லது அவமதித்தாலோ மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது அரசு விழாக்கள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்திற்கு முன்பாக வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்றும், பாடலின் ஆறு பத்திகளையும் (Stanzas) முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சட்டம் நிறைவேற்றதுடன் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தின்போது பல்வேறு இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றியபோது சர்ச்சை

அந்த வகையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தேசியக் கொடி ஏற்றப்படுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. அப்போது இரண்டு பத்திகள் பாடப்பட்ட பின்னர், அவற்றை சோனியா காந்தி நிறுத்தச் சொல்வது போன்று சைகை காட்டியது போன்ற செய்தி வெளியானது. ஆனால், சோனியா காந்தி, கார்கேவுக்கு நாற்காலிதான் கேட்டார். பாடலை நிறுத்தச் சொல்லவில்லை என்று காங்கிரஸ் விளக்கம் அளித்தது.

இதற்கிடையே வந்தே மாதரம் பாடலை அவமதித்ததாக சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புகார் அளிக்கப்பட்டது குறித்து மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே கூறியதாவது:-

அவர்கள் என்ன புகாரை பதிவு செய்யப் போகிறார்கள்? மகாத்மா காந்தி பாடிய அதே வந்தே மாதரம் பாடலைத்தான் நாங்களும் பாடினோம். ஜவஹர்லால் நேரு பாடியதையும் நாங்கள் பாடினோம். கடந்த 18 ஆண்டுகளாக, வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு பாடியது உட்பட, அவர்கள் பாடியவற்றையே நாங்களும் பாடி வருகிறோம். மேலும், 12 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோதும், இத்தனை ஆண்டுகளாக அவர் (பிரதமர் நரேந்திர மோடி) பாடி வரும் அதே வந்தே மாதரம் பாடலைத்தான் அவரும் பாடினார்.

இது ஒரு குற்றம் என்றால், கடந்த 18 ஆண்டுகளாக அவர்களும் இந்த குற்றத்தை செய்து வந்துள்ளனர் என்றுதான் அர்த்தம். இதுவே குற்றம் என்றால், மகாத்மா காந்தி மீதும் வழக்குத் தொடருங்கள். நேரு மீதும் வழக்குத் தொடருங்கள்.

மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com