

கடந்த 3 நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்து இன்று காலை 41.93 அடியாக உள்ளது. அணையில் 1110 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி உள்ளிட்ட இடங்களில் மழை இல்லாததால் மூல வைகையாற்று தண்ணீர் அணைக்கு வரவில்லை.
இதனால் பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது கேரளாவிலும் மழைப்பொழிவு இல்லாததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி சாகுபடி மற்றும் குடிநீர் தேவையை மட்டும் பூர்த்தி செய்கிறது. இதனால் கடந்த 3 நாட்களாக வைகை அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையின் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்து இன்று காலை 41.93 அடியாக உள்ளது. அணையில் 1110 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 117.25 அடியாக உள்ளது. 192 கனஅடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 2132 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 26.10 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 68.39 அடியாக உள்ளது. 1 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறையில் மட்டும் 0.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.