ஆசிரியர்களுக்கு பணிச்சுமை சுமத்துவதை விட்டு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - நயினார் நாகேந்திரன்

பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியரையே கண்காணிப்பு ஆசிரியராக,நியமிக்க வேண்டும் என்ற தவெக அரசின் உத்தரவு, கொஞ்சம் கூட ஏற்புடையதல்ல.
Nainar Nagendran
Published on: 

பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் 1ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை மதியம் என இருவேளை உணவு வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் சார்ந்து, அனைத்து பள்ளிகளிலும் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதை கண்காணிக்க ஒரு ஒருங்கிணைப்பு ஆசிரியர் நியமிக்க பள்ளி கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியரையே "கண்காணிப்பு ஆசிரியராக" நியமிக்க வேண்டும் என்ற தவெக அரசின் உத்தரவு, கொஞ்சம் கூட ஏற்புடையதல்ல என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

தமிழகம் முழுவதிலும் உள்ள 40 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதுமட்டுமன்றி, தமிழகத்தில் 3,957 அரசு பள்ளிகள் ஓராசிரியரை மட்டுமே கொண்டு இயங்கி வருவதாக, 2025-26 கல்வி ஆண்டின் UDISE+ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

இப்படி அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையால், அரசு ஆசிரியர்கள் ஏற்கனவே கூடுதல் பணிச்சுமையில் சிக்கித் தவிக்கும் நிலையில், காலை மற்றும் மதிய உணவுகளை தரம் பரிசோதிக்கும் பணியையும் அவர்கள் மீதே சுமத்தினால், எப்படி சமாளிப்பார்கள்?

அரசுப்பள்ளிகளில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

"Breathing Space" இல்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பதற்கு அரசு ஆசிரியர்கள் என்ன "Machine"களா? கூடுதல் பணிச்சுமையால் மனச்சோர்வடையும் ஆசிரியர்கள், மாணவர்களை எப்படி கவனமாக கையாள்வார்கள்?

எனவே, செயல்முறை சிக்கல்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யாமல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இருந்த காலை உணவு திட்டத்தை 8 ஆக விரிவாக்கம் செய்த முதல்வர்,ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் மீது கூடுதல் பணிச்சுமையை சுமத்துவதை விட்டு விட்டு, அரசுப் பள்ளிகளில் நிலவும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்

அதுமட்டுமன்றி காலை மற்றும் மதிய உணவு திட்டங்களை கண்காணிக்க வெவ்வேறு ஆசிரியர்களை நியமித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும்

என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com