

விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
ஊத்துக்கோட்டை, செங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது24). இவருக்கும் ஆந்திர மாநிலம், காரணி, காரூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மணிமேகலைக்கு காரூர் பகுதியில் வசித்து வரும் துர்கா பிரசாத்(28) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த கணவர் மணிமேகலையை கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து மணிமேகலை கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து செங்கரை பகுதிக்கு வந்து குடியேறினார். மேலும், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார்.
தொடர்ந்து துர்க்காபிராசாத்திடமும் மணிமேகலை தொடர்பில் இருந்தார். இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக துர்காபிரசாத்திடம் மணிமேகலை சரிவர செல்போனில் பேசாமல் இருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த துர்கா பிரசாத் நேற்று மதியம் மணிமேகலை வேலை செய்யும் தனியார் நிறுவனததிற்கு வந்து விசாரித்தார்.
அப்போது அங்கு பணியாற்றும் மேற்பார்வையாளர் ஒருவருடன் மணிமேகலைக்கு கள்ளக்காதல் ஏற்பட்டு இருப்பதும் இதனால் தன்னை கழற்றி விட்டு இருப்பதையும் அறிந்து ஆத்திரம் அடைந்தார். மேலும் அங்கு சென்றபோது மேற்பார்வையாளரிடம் மணிமேகலை சிரித்து பேசியதையும் துர்காபிரசாத் நேரில் பார்த்து கோபம் அடைந்தார். இதனால் மணிமேகலையை தீர்த்து கட்ட துர்கா பிரசாத் முடிவு செய்தார்.
இதையடுத்து மணிமேகலையிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி துர்காபிரசாத் அழைத்தார். தனக்கு நடக்கப்போகும் விபரீதம் பற்றி தெரியாமல் மணிமேகலையும் காதலன் துர்கா பிரசாத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
ஊத்துக்கோட்டை அருகே பெண்ணாலூர்பேட்டை அடுத்த சென்றான்பாளையம் காப்புகாடு பகுதிக்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்தனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த துர்காபிரசாத் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிமேகலையின் முகத்தில் சரமாரியாக வெட்டினார்.
இதில் மணிமேகலை மயங்கி கீழே சரிந்தார். உடனே அவரது கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்து விட்டு துர்காபிரசாத் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அவ்வழியே சென்ற பொது மக்கள் ரத்தவெள்ளத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து பெண்ணாலூர்ப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம் பெண் மணிமேகலை கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது. இன்று காலை துர்கா பிரசாத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.