புதிய பொருளாதார தடை: ஒரு சொட்டு எண்ணை கூட கிடையாது..! அமெரிக்கா- ஈரான் அறிவிப்புகளால் பொருளாதார நெருக்கடி அபாயம்

நேரடி எச்சரிக்கை காரணமாக சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Iran
Published on

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் ‘எகனாமிக் டி-டே’ என்ற பெயரில் மிகக் கடுமையான புதிய பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுபற்றி கூறியுள்ள அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் இந்த நடவடிக்கை ஈரானின் மீதம் இருக்கும் அனைத்துப் பொருளாதார கட்டமைப்புகளையும் துண்டிக்கும் இறுதி கட்ட நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.

ஈரானிடம் இருந்து எண்ணை வாங்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான அபராதங்கள் விதிக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு ஈரான் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்கா தனது பொருளாதாரப் போரைத் தொடர்ந்தால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவோ அல்லது வளைகுடாவின் வேறு எந்தப் பகுதியில் இருந்தோ ஒரு சொட்டு எண்ணை கூட ஏற்றுமதி செய்யப்படாது என்று திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போருக்கு ஆதரவு தரும் அல்லது பங்கேற்கும் எந்தவொரு நாடும் ஈரான் மீது போர் தொடுப்பதற்குச் சமமாகப் பார்க்கப்படும் என்றும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையில், ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டிருப்பதால் உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்காவின் புதிய தடைகள் மற்றும் ஈரானின் இந்த நேரடி எச்சரிக்கை காரணமாக சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனா போன்ற முக்கிய நாடுகள் ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணை இறக்குமதி செய்து வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த மோதல் போக்கு உலகப் பொருளாதாரத்தில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கி இருப்பதாக பல்வேறு நாடுகள் கவலை தெரிவித்து உள்ளன.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com