தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும்- ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தல்

மோதல்கள் நடைபெறும் இடங்களுக்கு அப்பாலும் பரவலான தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
Ambassador Harish, Permanent Representative of India to the UN
Published on
Summary

தடையற்ற கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என ஐ.நா. சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கச்சா எண்ணை, எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளது. இந்த நிலையில் முக்கிய கடல் வழித்தடங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் மோதல் சூழலில் உணவு என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் ஹரிஷ் பர்வத்தனேனி பேசியதாவது:-

ஆயுத மோதல்களின் மிகக் கடுமையான மனிதாபிமான விளைவுகளில் ஒன்றாக உணவுப் பாதுகாப்பின்மை இருந்து வருகிறது. மோதல்கள் நடைபெறும் இடங்களுக்கு அப்பாலும் பரவலான தாக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

எரிசக்தி சந்தைகள், உர விநியோகம், கடல்சார் போக்குவரத்து, மனிதாபிமான உதவிகள், விவசாய வர்த்தகம் ஆகியவற்றில் ஏற்படும் இடையூறுகள், உலகெங்கிலும் உள்ள உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைகின்றன.

இதனால் உணவு இறக்குமதி செய்யும் வளரும் நாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே, முறையான வர்த்தகம் மற்றும் மனிதாபிமானப் பொருட்கள் கொண்டு செல்லப்படுதல் ஆகியவை தடைகள் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதோடு, முக்கியமான கடல் வழித்தடங்கள் மற்றும் கடல் சார் உள்கட்டமைப்பைப் பாதுகாக்கவும் சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

மோதல்களால் ஏற்படும் மனிதாபிமான விளைவுகளைக் குறைப்பதே ஐ.நா. பாதுகாப்பு சபையின் உடனடி முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

உணவு, உரங்கள், எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற போக்குவரத்திற்குப் பாதுகாப்பான மற்றும் கடல்சார் வர்த்தகப் பாதைகள் இன்றியமையாதவை ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com