போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது - உதயநிதி

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
Udhayanidhi Stalin
Published on

‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் குளறுபடி

'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

தர்ணா போராட்டம்

இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். 25 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் எழும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இதைபோல நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வியாசர்பாடி அடுத்த எம்.கே.பி. நகர் தபால் நிலையம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் #NEET தேர்வுக்கு எதிராக போராடிய SFI மற்றும் DYFI அமைப்பினரை காவல்துறை மூலம் வலுக்கட்டாயமாக கைது செய்யும் #SofaModel அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

#CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடுவோரை கைது செய்வது என்பது, NEET விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தைத் தனக்கெதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, Sofa Model அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com