

நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்ததை எதிர்த்து, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை முன்னெடுத்தது. கடந்த மாதம் டெல்லி ஜந்தர் மந்தரில் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சரவையில் இருந்து நீக்கும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதை சரியாக பயன்படுத்த நினைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவித்தது. நேற்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றபோது, போலீசார் துணை ராணுவத்துடன் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான இந்த அடக்கு முறைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இன்று மாலை திடீரென ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்து சென்றனர். பிரதமர் மோடி வீட்டின் அருகில் போலீசார் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தனர்.
அவர் கீழே அமர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர், கலைந்து செல்லவில்லை என்றால், கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனால், ராகுல் காந்தி கலைந்து செல்லவில்லை. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி பிரதமர் வீட்டு அருகே போராட்டம் நடத்தியதை ஆம் ஆத்மி கட்சி விமர்சனம் செய்துள்ளது. மோடிதான் அவரை உட்கார வைத்துள்ளார் என்று குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய்சிங் தனது எக்ஸ் பக்கத்தில் "கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டத்தை பலவீனப்படும் வகையில், பிரதமர் மோடி ராகுல் காந்தியை போராட்டம் நடத்த கொண்டு வந்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான அதிஷி கூறுகையில் "மத்திய அரசு ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் CJP மற்றும் வாங்சுக் உடன் பேச மறுத்துவிடடது. ராகுல் காந்தி போராட்டத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றபோது 100 மீட்டருக்கு முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டனர். ஆனால், ராகுல் காந்தியை பிரதமர் வீடு வரைக்கும் அனுமதித்துள்ளனர். காங்கிரஸ்- பாஜக ஒன்று என்பது இதுவே சாட்சி" எனத் தெரிவித்துள்ளார்.