

பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
தொழில் நகரமான திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அவிநாசி, பெருமாநல்லூர், காங்கே–யம், பல்லடம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான பின்னலாடை நிறு–வனங்கள் செயல்பட்டு வருகின்றன.
வார விடுமுறை தினமான நேற்று அவிநாசி பகுதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு விடு–முறை விடப்பட்டிருந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காகவும், ஊர் சுற்றி பார்ப்பதற்காகவும் அவிநாசி பஸ் நிலையத்தில் வடமாநில தொழி–லாளர்களின் கூட்டம் அலைமோதியது.
இந்த நிலையில், நேற்று மாலை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 2 பெண்களும், பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டு பயங்கர குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த வாலிபர் ஒருவர், சண்டையை தடுத்து நிறுத்த முயன்றார். ஆனால் ஆவேசத்தில் இருந்த 2 பெண்களும் அந்த வாலிபரின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து சண்டையிட்டனர். பஸ் நிலையத்தில் இளம்பெண்கள் சண்டையிட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அந்த இளம்பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அவிநாசி அருகே தங்கி இருந்து பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், 2 பேரும் ஒரே வாலிபரை காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே ஏற்கனவே செல்போனில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், நேற்று மாலை பஸ் நிலையத்தில் அந்த வாலிபருடன் ஒரு இளம்பெண் நின்று பேசிக்கொண்டிருந்ததை மற்றொரு பெண் பார்த்துள்ளார். "நான் காதலிக்கும் வாலிபருடன் நீ எப்படி பேசலாம்?" என கேட்டு அவர் தகராறில் ஈடுபட்டதால், இருவருக்கும் இடையே குடுமிப்பிடி சண்டை மூண்டது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து அந்த வாலிபர் 2 பெண்களையும் சமாதானம் செய்து தனித்தனி பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தார்.
இதனிடையே, பஸ் நிலையத்தில் 2 இளம்பெண்கள் குடுமிப்பிடி சண்டை போடுவதையும், அதனை வாலிபர் ஒருவர் தடுக்க முயல்வதையும் அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.