ஒன்றன்பின் ஒன்றாக சாலையை அடுத்தடுத்து கடந்த 2 புலிகள்

வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லும் அற்புதமான காட்சிகள், இயற்கை ஆர்வலர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாக அமைந்து வருகின்றன.
புலிகளை படத்தில் காணலாம்
புலிகளை படத்தில் காணலாம்
Published on: 
Summary

சாலையோர அடர்ந்த புதரிலிருந்து வெளியே வந்த புலி ஒன்று நிதானமாக சாலையை கடந்தது. அதனைத்தொடர்ந்து மற்றொரு புலியும் அதே வழியாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி-மாயார் சாலை, இயற்கை மற்றும் வனவிலங்கு ஆர்வலர்களின் விருப்பமான பயணப் பாதையாக மாறி வருகிறது. பசுமை நிறைந்த அடர்ந்த வனப்பகுதிகள், இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடர்கள், சாலையோரங்களில் உலா வரும் வனவிலங்குகள் என மாயார் சாலை இயற்கையின் அழகிய பொக்கிஷமாக திகழ்கிறது.

குறிப்பாக, காலை மற்றும் மாலை வேளைகளில் யானைகள், புலிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லும் அற்புதமான காட்சிகள், இயற்கை ஆர்வலர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வாழ்வில் மறக்க முடியாத தருணங்களாக அமைந்து வருகின்றன.

சாலையை கடந்த புலிகள்

இந்நிலையில் நேற்று மசினகுடி-மாயார் சாலையில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் வாகனங்களில் பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது சாலையோர அடர்ந்த புதரிலிருந்து வெளியே வந்த புலி ஒன்று நிதானமாக சாலையை கடந்தது. அதனைத்தொடர்ந்து மற்றொரு புலியும் அதே வழியாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இந்த அரிய காட்சியை கண்ட சுற்றுலா பயணிகள், பாதுகாப்பான தொலைவில் வாகனங்களை நிறுத்தி, வாகனங்களுக்குள் இருந்தபடியே தங்களது செல்போன்களில் பதிவு செய்தனர். மேலும் இதனை ஆச்சரியத்துடன் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அறிவுறுத்தல்

கடந்த 22-ந்தேதி இதே மாயார் சாலையில் புலி ஒன்று சாலையை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது. தற்போது 2 புலிகள் அடுத்தடுத்து சாலையை கடந்த நிகழ்வு இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வனவிலங்குகளின் நடமாட்டம் நிறைந்த இப்பகுதியில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை விட்டு கீழே இறங்காமலும், வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

X