

தேனி சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் மொத்தம் 15 பேர் பிடிப்பட்ட நிலையில், மிஞ்சிய இரண்டு பேரும் கடலூரில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் சரணடைந்துள்ளனர்.
இதன்மூலம் தப்பிய அனைவரும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.
தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து கடந்த திங்கள்கிழமையன்று, ஒருவருக்கு வலிப்பு வந்ததுபோல் நாடகம் போட்டு, அவரை பார்வையிட வந்தக் காவலரை தாக்கிவிட்டு கைதிகள் 17 பேர் தப்பினர்.
கைதிகள் தப்பியது குறித்து தகவல் கிடைத்ததும், தென்மண்டல காவல்துறை தலைவர் விஜயேந்திர பிதாரி மற்றும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கௌதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கினர்.
தப்பியோடிய கைதிகளைக் கண்டுபிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தப்பிய கைதிகள் பலர் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும் தேனி எல்லையோர மாவட்டம் என்பதால், கேரள காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அடர்ந்த காடுகளில் மறைந்திருக்கலாம் என டிரோன் உதவியுடன் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் கைதிகள் தப்பிச் செல்வதை தடுக்க, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட எல்லைகள் மட்டுமின்றி கேரளா எல்லைப் பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
தீவிர தேடுதல் வேட்டையில் இன்று மதியம் வரை 15 பேர் கைது செய்யப்பட்டனர். முதல் கட்டமாக செவ்வாய்கிழமை காலை 5 கைதிகளும், பின்னர் அன்றைய தினமே பல்வேறு இடங்களில் மறைந்திருந்த மேலும் 8 கைதிகளும் என மொத்தம் 13 பேர் பிடிபட்டனர்.
பின்னர் மலையடிவாரப் பகுதிகளில் பதுங்கியிருந்த ரெஜின் மற்றும் பொன்முத்து செல்வம் உள்ளிட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய இருவரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வந்தநிலையில், அவர்களே காவல் நிலையத்தில் வந்து சரணடைந்தனர்.
சகோதரர்களான திருப்பதி, மீனாட்சி சுந்தரம் இருவரும் இன்று மாலை கூடலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களும் கைது செய்யப்பட்டு, தற்போது தப்பிய அனைவரும் போலீஸ் காவலில் உள்ளனர்.
மனித அலட்சியம் மற்றும் சிறைத்துறையின் பாதுகாப்பு குறைபாடே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பாதுகாப்பு பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 2 தலைமை காவலர்கள் உட்பட 9 சிறைத்துறை பணியாளர்கள் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இனி காவலர்களை தாக்கிவிட்டு தப்ப செல்லும் கைதிகளை சுட்டுப்பிடிக்கலாம் எனவும் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.