

சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன் ஏர் நிறுவனத்தின் போயிங் ரக பிரமாண்டமான, மற்றொரு கார்கோ விமானம், நேற்று பகலில், தாய்லாந்து நாட்டின் ராயோங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய கார்கோ பகுதியில் வந்து தரை இறங்கியது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் மிகப்பெரிய கார்கோ விமானங்களான, ‘போயிங்’ ரகத்தின் 2 விமானங்கள் ஒரே நாளில், அடுத்தடுத்து வந்து தரையிறங்கி சரக்குகளை இறக்கி ஏற்றிக்கொண்டு சென்றன.
வியட்நாம் நாட்டின் தலைநகர் ஹனோய் விமான நிலையத்தில் இருந்து, மிகப்பெரிய போயிங் 747 ரக கார்கோ விமானம் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலைய கார்கோ பகுதியில் வந்து தரை இறங்கியது. ஏர் அட்லாண்டா ஐஸ்லாண்டிக், நிறுவனத்தால் இயக்கப்படும், நெட்வொர்க் ஏவியேஷியன் கார்கோ விமானம், சுமார் 150 டன் சரக்குகளை கையாள கூடியது.
இந்த அளவு மிகப்பெரிய கார்கோ விமானம், சென்னை பழைய விமான நிலையம் பகுதியில் வந்து தரையிறங்குவது குறித்து தகவல் கிடைத்ததும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டனர். தொடர்ந்து விமானம் தரை இறங்குவதற்கு வசதியாக, அங்கு நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்கோ விமானங்கள் வேறு இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டன.
அதன்பின்பு அதிகாலையில் சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது. இதையடுத்து அந்த விமானத்தில் கொண்டுவரப்பட்ட சரக்குகள் இறக்கப்பட்டு, அதன் பின்பு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய சரக்குகள், கார்கோ விமானத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின்பு அந்த கார்கோ விமானம் நேற்று சென்னையில் இருந்து, ஹாங்காங் புறப்பட்டு சென்றது.
இதை அடுத்து சர்வதேச அளவில் சரக்கு போக்குவரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன் ஏர் நிறுவனத்தின் போயிங் ரக பிரமாண்டமான, மற்றொரு கார்கோ விமானம், நேற்று பகலில், தாய்லாந்து நாட்டின் ராயோங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை சர்வதேச விமான நிலைய கார்கோ பகுதியில் வந்து தரை இறங்கியது.
இந்த கார்கோ விமானமும், சுமார் 150 டன் சரக்குகள் ஏற்றக்கூடிய மிகப்பெரிய கார்கோ விமானம் ஆகும். எனவே இந்த விமானம் தரையிறங்கும் போதும், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், தகுந்த முன்னேற்பாடுகளை செய்திருந்தனர். அதன் பின்பு இந்த விமானமும் சரக்குகளை இறக்கி, ஏற்றிவிட்டு, சீனாவில் உள்ள எசோவ் நகர் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்கிறது.
ஒரே நாளில் சென்னை விமான நிலையத்துக்கு, சர்வதேச அளவில் கார்கோ போக்குவரத்தில் சிறப்பு வாய்ந்த பிரமாண்டமான 2 கார்கோ விமானங்கள், வந்து தரை இறங்கியது சென்னை விமான நிலைய கார்கோ ஊழியர்கள், அதிகாரிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் சென்னை விமான நிலையம் பல்வேறு நாடுகளுக்கு, இடையிலான சரக்கு போக்குவரத்தில், முக்கிய மையமாக விளங்கி வருவதை, இதைப் போன்ற மிகப் பிரமாண்டமான கார்கோ விமானங்கள், சென்னைக்கு வந்து செல்வதை எடுத்துக்காட்டுகிறது என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.