

புழல் மத்திய சிறையில் இருந்து இந்த வார தொடக்கத்தில் தப்பி சென்ற இரு கைதிகளை சிறப்பு காவல் குழுவினர் மீண்டும் கைது செய்துள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் தனித்தனி வழக்குகளில் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர் மற்றும் நேபாள நாட்டை சேர்ந்தவர் - தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் சிறை வளாகத்தை பார்வையிட்டார். அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, ஏழு சிறை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
முதல் சம்பவத்தில், சென்னையின் பாடி கலைஞர் நகர், இயேசுநாதர் தெருவில் வசித்து வந்த நேபாள நாட்டை சேர்ந்த சுதீப் போகதி (21) என்பவர், செவ்வாய்க்கிழமை அன்று சிறையில் இருந்து தப்பினார். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், திருட்டு வழக்கு ஒன்றில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சுதீப் எவ்வாறு தப்பினார் என்பது குறித்த விசாரணையில், அவர் சிறை சுவரில் பொருத்தப்பட்டிருந்த சூரிய ஆற்றல் மின் உற்பத்தி அமைப்பின் கேபிள்களை பிடித்துக்கொண்டு சுவரேறி குதித்தது தெரியவந்தது. வெளியே குதித்தபோது அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. சிறிது நேரம் மயக்கமடைந்த நிலையில் அங்கேயே கிடந்த அவர், பின்னர் அங்கிருந்து தப்பி சென்றார் என்று அந்த அதிகாரி கூறினார்.
இரண்டாவது சம்பவத்தில், புழல் சிறை வளாகத்திற்குள் இருந்த சிறை உணவகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த, திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (41) என்பவர் புதன்கிழமை தப்பினார்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சட்டத்தின் போக்சோ சட்டத்தின் கீழ், 2021-ஆம் ஆண்டு சுரேஷ் கைது செய்யப்பட்டிருந்தார். சிறையில் அவரது நன்னடத்தையை கருத்தில் கொண்டு, சிறை வளாகத்திற்கு வெளியே உள்ள சிறை அங்காடியில் அவருக்கு அன்றாடப் பணிகள் வழங்கப்பட்டிருந்தன. காவலர்களின் கவனம் திசைதிருப்பப்பட்டிருந்த நேரத்தில், காலை 7 மணியளவில் அவர் தப்பிச் சென்றதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தப்பி சென்றவர்களை கண்டறிய அமைக்கப்பட்ட சிறப்பு காவல் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ஒரு குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திருமங்கலத்தில் உள்ள தேநீர் கடை ஒன்றில் இருந்த நேபாள நாட்டை சேர்ந்த சுதீப் போகதியை இன்று (வியாழக்கிழமை) காலை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில், மற்றொரு சிறப்பு குழுவினர் குன்றத்தூரில் சுரேஷைக் கண்டறிந்து கைது செய்தனர்.