

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. சார்பில் மரகதம் குமரவேல், தி.மு.க. சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் சுகந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர்.
தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்டு), கார்த்திகா (நாம் தமிழர்) மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 22 பேர் போட்டியிட்டனர்.
மதுராந்தகம் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 13 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 1 லட்சத்து 84 ஆயிரத்து 413 பேர் வாக்களித்து இருந்தனர். 86.26 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் உள்ள 2,23,306 வாக்காளர்களில் 1,79,314 பேர் வாக்களித்து இருந்தனர். 80.30 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாகவும், தாராபுரத்தில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்பட்டன.
இந்த நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மதுராந்தகம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை விட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகத்தை போல் தாராபுரம் தொகுதியிலும் தமிக வெற்றிக்கழக வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றுள்ளார். இவர் தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று த.வெ.க.வேட்பாளர் சத்யபாமா வெற்றி பெற்றுள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வெற்றிபெற்றதன் மூலம் த.வெ.க.வின் பலம் 109 ஆக உயர்ந்துள்ளது. இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இடைத்தேர்தலில் கிடைத்த வெற்றி 4 மாத நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல்- 61,470
தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன் - 43,916
அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத் - 38,770
நாம் தமிழர் கட்சி- 1,703
சிபிஎம்- 1,441
த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா- 62.596
தி.மு.க. வேட்பாளர் சுகன்யா - 52,400
அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி- 41,078
நாம் தமிழர் கட்சி -4.954
சிபிஐ-1099