

த.வெ.க. ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மாற்று கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது கூறியதாவது:-
சட்டசபையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் சொந்த பிரச்சினையைத்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுடைய பிரச்சனையை பேசுவது கிடையாது. மக்களுடைய பிரச்சினையை பேசும் ஒரே கட்சி அதிமுகதான். வேறு யாரும் பேசுவது இல்லை.
இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவது இல்லை. இந்த ஆட்சியில் கடன்தான் அதிகரிக்கும். தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கம் என்றால் அது அதிமுகதான். ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் மக்களுடைய பிரச்சினையை முதன்முதலாக கொண்டு செல்லும் கட்சி அதிமுக.
எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கும் போது கரண்ட் கட் ஆனது. இதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, இந்த ஆட்சியின் லட்சணம் இதுதான். கரண்ட் இப்படிதான் போய்க் கொண்டே இருக்கும். அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பம்புசெட்டிற்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கினோம்.
த.வெ.க. ஆட்சி 5 ஆண்டுகள் இருக்கப்போவது இல்லை. அப்படி இருந்தால் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக மாறிவிடும். இப்படிப்பட்ட ஆட்சி விபத்தில் வந்துவிட்டது. யாரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு கொள்கையும் கிடையாது. ஒன்னும் கிடையாது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.