

நீலகிரி மாவட்டம் குன்னூர்-கோத்தகிரி சாலையில் உள்ள வட்டப்பாறை பகுதியில் இரவு வீசிய பலத்த காற்றின் காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் குன்னூர்-கோத்தகிரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தொடர்ந்து, சுமார் 1 மணி நேரம் போராடி சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. இதனை தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள் சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.