

பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்கள், சிறுமிகள், திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன்மூலம் ஏ.சி. பஸ்கள் தவிர மற்ற அனைத்து பஸ்களிலும் பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் அரசு பஸ்களில் இனி கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.
குறிப்பாக கண்டக்டர்கள், பயணிகளுக்கு உட்கார்ந்து கொண்டு டிக்கெட் வழங்கக் கூடாது. அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று டிக்கெட் கொடுக்க வேண்டும். இலவச பயணம் என்ற அலட்சியம் இருக்கக் கூடாது. கனிவாகப் பேச வேண்டும், பயணிகள் ஏறிய பிறகும், கீழே இறங்கிய பிறகும் கதவுகளை மூட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
மாநகர பஸ்களை ஓரமாக நிறுத்தி பயணிகளை இறக்கவும், ஏற்றவும் கண்டக்டர், டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, 7 ஆயிரம் பேர் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு 4 மையங்களில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
மேலும் பணிமனைகளிலும் ஆலோசனை வழங்கப்பட்டது. இலவச பயணம் என்றாலும் கட்டாயம் பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்க வேண்டும், முன்னும் பின்னும் நடந்து சென்று டிக்கெட் வழங்க வேண்டும், பெண் பயணிகளிடம் கடினமாக நடந்து கொள்ளக் கூடாது என்று ஆலோசனை வழங்கி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.