காட்டாங்கொளத்தூர் அருகே சோகம்: அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Minister Jagadeeswari
Published on
Summary

காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

தமிழ்நாடு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தொடர் விடுமுறைக்குப் பிறகு சென்னையில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து இன்று அதிகாலை சென்னை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார்.

அமைச்சரின் அரசு வாகனத்திற்கு முன்பாகக் பாதுகாப்பு வாகனமும், அதன் தொடர்ச்சியாக அமைச்சரின் குடும்பத்தினர் பயணித்த அவருக்குச் சொந்தமான மாருதி எர்டிகா காரும் அணிவகுப்பாக வந்துகொண்டிருந்தன. காலை நேரத்தில் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை வாகனங்கள் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகச் சாலையின் குறுக்கே வந்த இருசக்கர வாகனம் மீது அமைச்சரின் சொந்த கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இளைஞர் உயிரிழப்பு

ஹோண்டோ டியோ ரக இருசக்கர வாகனத்தில் பயணித்த இளைஞர், அதிவேகமாக வந்த கார் மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்துப் புலனாய்வுத் துறை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞர் விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இறையன்பு (வயது 26) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாகனம் பறிமுதல்

விபத்து நேரிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த வாகனத்தைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், காரை ஓட்டி வந்த ஓட்டுநரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, அதிவேகப் பயணமா அல்லது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com