

வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டி இருந்ததால், குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
காந்தி ஜெயந்தியை தொடர்ந்து 2 நாள் வார விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டின.
தமிழகம் மட்டுமின்றி கேரளம், கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் அந்த மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மலை ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அனைத்து பெட்டிகளிலும் இருக்கைகள் முழுமையாக நிரம்பி விடுவதால், அடுத்த ரெயில் வரும் வரை பயணிகள் நீண்டநேரம் காத்திருந்து பயணம் மேற்கொண்டனர்.
தமிழகம், கேரளம், கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களை இணைக்கும் முக்கிய சுற்றுலா மாவட்டமாக உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சொந்த வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் மூலம் வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதனால் அங்குள்ள முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் குன்னூர் மலைப்பாதையில் கல்லார், பர்லியார், காட்டேரி, ஊட்டி தேசிய நெடுஞ்சாலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் சாலையில் ஸ்தம்பித்து நிற்பதை பார்க்க முடிந்தது.
மேலும் வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டி இருந்ததால், குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.