

மழைக்காலங்களில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் மழை நீரை வெளியேற்றும் வகையில் யானை கவுனி சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு கூட சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்னும் தொடர்ந்து மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக பெரியமேடு பழைய நடராஜா தியேட்டர் பகுதியில் இருந்து பேசின் பாலம் செல்வதற்கு ஒரே வழி யானை கவுனி சாலையாகும். இந்த சாலை 80 அடி அகலம் கொண்டதாகும். இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் இரு வழியாக செல்லக்கூடியது.
மழைக்காலங்களில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் மழை நீரை வெளியேற்றும் வகையில் யானை கவுனி சாலையில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. பவுடர் மில் ரோட்டையொட்டி உள்ள கால்வாயில் மழை நீரை கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் 3 மாதத்திற்கு மேலாக யானை கவுனி சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெரியமேடு சிக்னல் பகுதி, புளியந்தோப்பு பகுதியில் காலையில் இருந்து இரவு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி நடைபெற்று வருவதால் அனைத்து வாகனங்களும் புளியந்தோப்பு பிரதான சாலை, யானை கவுனி சாலை வழியாகவே வடசென்னை பகுதிகளுக்கு செல்ல முடியும்.
இந்த சாலை மூடப்பட்டதால் கேபி பார்க் குடியிருப்பு பகுதி வழியாகவும் சிறிய தெருக்கள் வழியாகவும் வாகனங்கள் செல்கின்றன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் அங்கு கடும் நெரிசல் ஏற்படுகிறது.
வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன. பணிகள் மெதுவாக நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெரும்பாலான வாகனங்கள் வால் டாக்சாஸ் சாலை வழியாக செல்வதால் அங்கும் நெரிசல் அதிகரித்துள்ளது.
மழைக்காலம் தொடங்கிய பிறகு கூட இன்னும் மழைநீர் கால்வாய் பணிகள் முடிக்கப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், யானை கவுனி சாலை மழைநீர் கால்வாய் பணி 60 மீட்டர் அளவிற்கு நடைபெற வேண்டும். பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன. அந்த சாலையை கடந்து கால்வாயை கொண்டு செல்ல வேண்டும். மழை இல்லாமல் இருந்தால் இன்னும் 15 நாட்களுக்குள் பணி நிறைவடையும் என்றார்.
வடசென்னை பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கியமான சாலைகள் மூடப்பட்டதால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகிறோம். குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தப் பணிகளை எல்லாம் முடித்திருக்கலாம். அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
வடசென்னை என்றாலே பாராமுகமாகவே இருந்து வரும் நிலை மாற வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்காமல் தாமதமாவதால் அலுவலகத்துக்கு செல்பவர்கள், வியாபாரிகள், வர்த்தக, வாகனங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே இன்னமும் காலம் தாழ்த்தாமல் யானை கவுனி சாலையை விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.