திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்ய பயன்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 18.50 அடியாக உயர்ந்துள்ளது.
திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
Published on: 
Summary

திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு வாரத்திற்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. தடை நீங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தாக குளித்து மகிழ்ந்தனர்.

குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம்

கடந்த இரண்டு வாரங்களில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 9 அடியும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 15 அடியும், சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 5 அடியும், மாம்பழத்துறையாறு அணை 20 அடியும், முக்கடல் அணை 13 அடியும் உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 26.90 அடியாக உள்ளது. அணைக்கு 416 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 116 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53.85 அடியாக உள்ளது. அணைக்கு 449 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 225 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

குடிநீர் சப்ளை

இதேபோல் சிற்றார் -1 அணை நீர்மட்டம் 5.43 அடியாகவும்,​ சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 8.53 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 14.90 அடியாகவும்,​ மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 53.64 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் மாநகருக்கு குடிநீர் சப்ளை செய்ய பயன்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 18.50 அடியாக உயர்ந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பெய்த தொடர் மழையின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழை சற்று குறைந்ததையடுத்து அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்து மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள்

இதனால் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஒரு வாரத்திற்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. தடை நீங்கியதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தாக குளித்து மகிழ்ந்தனர். இன்று வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லை. குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com