ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்றும் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கையின் ரம்மியமான சூழலை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
ஏற்காடு, மேட்டூர், குரும்பப்பட்டி  உயிரியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on: 
Summary

தொடர் விடுமுறையையொட்டி நேற்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் ஏற்காட்டில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.

சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமான ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள்.

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள்

இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி நேற்று காலை முதலே ஏற்காட்டிற்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்தனர். இதனால் ஏற்காட்டில் அனைத்து முக்கிய பகுதிகளிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.

ஏற்காடு மலைப்பாதை

இதனால் நேற்று காலை முதலே ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. ஏற்காடு மலைப்பாைத மற்றும் ஏற்காடு சாலைகளில் 3 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

2-வது நாளாக குவிந்த பயணிகள்

சனிக்கிழமையான இன்றும் காலை முதலே ஏற்காட்டிற்கு பஸ்கள், கார்கள், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சாரை, சாரையாக வந்தனர். அவர்கள் அங்குள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளான அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா, இயற்கை சுற்று சூழல் பூங்கா, மான் பூங்கா, ஜென்ஸ் சீட், லேடீஸ் சீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், உள்பட பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டு ரசித்தனர்.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மேலும் படகு குழாமிலும் குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏற்காட்டில் சாலையோர கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள உணவு பதார்த்தங்களையும் வாங்கி ருசி பார்த்தனர். ஏற்காட்டில் தற்போது மாலை நேரங்களில் நிலவி வரும் குளிர்ச்சியான சீதோஷ்ணத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்காட்டில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை பூங்கா

இதே போல சேலம் மற்றும் ஈரோடு, தருமபுரி மாவட்டங்களில் இருந்து மேட்டூர் அணை பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக இன்று அதிக அளவில் வருகை தந்தனர். அவர்கள் அங்குள்ள காவிரியில் நீராடி அணை முனியப்பனை தரிசனம் செய்தனர்.

பின்னர் அங்குள்ள ஊஞ்சல்கள் மற்றும் சறுக்குகளில் ஏறி சிறுவர்கள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். குடும்பத்துடன் வந்தவர்கள் வீட்டில் இருந்து சமைத்து எடுத்து வந்த உணவுகளை குடும்பத்துடன் அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர். கடைகளில் பொரித்து வைக்கப்பட்டிருந்த மீன்களை வாங்கி ருசி பார்த்தனர்.

குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா

சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் இன்றும் குவிந்த சுற்றுலா பயணிகள் இயற்கையின் ரம்மியமான சூழலை பார்வையிட்டு மகிழ்ந்தனர். மேலும் அங்குள்ள குரங்குகள், மயில்கள், மான்கள் மற்றும் பறவைகளையும் பார்வையிட்டனர். பூலாம்பட்டி ஏரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்ததுடன் இயற்கை அழகையும் பார்த்து ரசித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com