

அதிதீவிர கனமழையால் கடலில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றமாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் குமரி மாவட்டத்தில் அதிதீவிர கனமழை பெய்யும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு இருக்கின்றன.
மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று மூடப்பட்டன.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் கடற்கரையின் நுழைவாயில் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேபோல் முட்டம், சொத்தவிளை, சங்குதுறை மற்றும் கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் மாத்தூர் தொட்டிப்பாலம், காளிகேசம் போன்ற மற்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
தடையை மீறி சுற்றுலா பயணிகள் யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழை காரணமாக திறப்பரப்பு அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவியில் குளிப்பதற்கான தடை இன்று 4-வது நாளாக நீடிக்கிறது. அங்கேயும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதிதீவிர கனமழையால் கடலில் பலத்த காற்று வீசும் என்றும், கடல் சீற்றமாக காணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கடலோர மீனவர் கிராமங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க இன்று கடலுக்கு செல்லவில்லை. கடியப்பட்டினம், முட்டம், ராஜாக்கமங்கலம் போன்ற கரையோர பகுதிகளில் நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், அதிகாலையிலேயே மீன்பிடித்து விட்டு கரை திரும்பினர்.
நடுக்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் முட்டம் மற்றும் தேங்காய்ப்பட்டினம் துறை முகங்களில் விசைப்படகுகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சின்னமுட்டம் துறைமுகத்திலும் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடற்கரை கிராமங்கள் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நீர்நிலைகளில் குளிப்பதையோ அல்லது செல்பி எடுப்பதையோ தவிர்க்க வேண்டும் என்றும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.