நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற கட்டணம் வசூல்- வாகனங்கள் நெரிசல் இன்றி செல்கிறது

அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற கட்டணம் வசூல்- வாகனங்கள் நெரிசல் இன்றி செல்கிறது
Published on: 
Summary

தடையற்ற தானியங்கி சுங்க கட்டணம் நடைமுறை தமிழகத்தில் முதல் முறையாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல்களை தவிர்க்கும் வகையில் தடையற்ற சுங்கக்கட்டணம் வசூல் முறை அமல் படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சுங்கச்சாவடிகளில் தடுப்புகள் எதுவும் இல்லாமல் தானியங்கி கேமராக்கள் மூலம் வாகனங்களின் நம்பர் பிளேட் மற்றும் பாஸ்டேக் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த தடையற்ற தானியங்கி சுங்க கட்டணம் நடைமுறை தமிழகத்தில் முதல் முறையாக செங்கல்பட்டு அருகே பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

பரனூர் சுங்கச்சாவடி

இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் தற்போது வாகனங்கள் எந்தவித காத்திருப்பும் இல்லாமல் தானியங்கி முறையில் சுங்ககட்டணம் செலுத்தி செல்வதால் அப்பகுதியில் வாகன நெரிசல் முற்றிலும் தவிர்க்கப்பட்டு உள்ளது. இதனை வாகன ஓட்டிகள் வரவேற்று உள்ளனர். அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இதற்கிடைேய தற்போது சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நெமிலி சுங்கச்சாவடியில் தடையற்ற தானியங்கி சுங்க கட்டணம் வசூல் முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நடைமுறை 12-ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்து உள்ளது.

ஏ.ஐ.தொழில்

சுங்கச்சாவடிகளில் ஏ.ஐ.தொழில் நுட்பத்துடன் உள்ள கேமிராக்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டேக், வாகனங்களின் பதிவு எண்ணை ஒப்பிட்டு அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணக்கில் இருந்து சுங்கக்கட்டணம் தானாகவே கழிக்கப்படும். இதனால் வழக்கமான சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். தமிழகத்தில் தடுப்புகள் இல்லாத கட்டண வசூல் முறை பரனூரை தொடர்ந்து 2வதாக நெமிலி சுங்கச்சாவடியில் அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விரைவில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாலாஜா அருகே உள்ள சென்னசமுத்திரம் சுங்கச்சாவடியிலும் சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு இந்த திட்டத்தை செயல்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து உள்ளது.

பாஸ்டேக்கில் போதுமான பணம் இல்லாமல் இருந்தாலோ அல்லது செல்லாத பாஸ்டேக் வைத்திருந்தாலோ சுங்ககட்டணத்தை போல் இருமடங்கு அபராதம் விதித்து மின்னனு நோட்டீஸ் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

X