திருப்பூர்: தந்தை இழப்பை தாங்காத முடியாமல் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி தற்கொலை!

கணவன், குழந்தை என இருவரையும் இழந்து தற்போது பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார் சாதனாவின் தாய்.
திருப்பூர்: தந்தை இழப்பை தாங்காத முடியாமல் ரெயில் முன் பாய்ந்து பிளஸ்-2 மாணவி தற்கொலை!
Published on: 

திருப்பூர் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ஜானகி. ஜானகி மங்கலம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த தம்பதிக்கு சாதனா (வயது 16) என்ற ஒரே மகள் இருந்தார். சாதனா, தனது தாய் பணியாற்றி வந்த அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

​திருமணமாகி நீண்ட நாட்களுக்கு பிறகு பிறந்த ஒரே மகள் என்பதால், கார்த்திக்கும், ஜானகியும் சாதனாவை தங்களது உயிருக்கு உயிராக, மிகவும் செல்லமாக வளர்த்து வந்தனர். குறிப்பாக, தந்தை கார்த்திக் மீது சாதனா அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்.

மகள் எதை கேட்டாலும் மறுப்பு சொல்லாமல் உடனடியாக வாங்கி கொடுத்து, எந்தவொரு குறையும் தெரியாமல் கார்த்திக் வளர்த்து வந்தார்.

இவர்களது வீட்டில் இருந்து பள்ளி சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதனால் சாதனா தினமும் வீட்டின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.

தினமும் காலையில் தந்தை கார்த்திக், மகளை பத்திரமாக அழைத்து சென்று தண்டவாளத்தை கடக்க விட்டு, பள்ளியில் கொண்டு போய் விட்டுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

ரெயில் மோதி தந்தை மரணம்​

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வழக்கம் போல் காலையில் மகள் சாதனாவை பள்ளியில் விட்டுவிட்டு கார்த்திக் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த ரெயில் எதிர்பாராத விதமாக கார்த்திக் மீது பயங்கரமாக மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தன் மீது உயிரையே வைத்திருந்த தந்தையின் திடீர் மரணம், மாணவி சாதனாவை நிலைகுலைய செய்தது. தந்தை இறந்த சோகத்தில் இருந்து அவரால் மீண்டு வரவே முடியவில்லை. எப்போதும் கலகலப்பாக சுற்றித்திரிந்த சாதனா, தந்தையின் மறைவுக்கு பிறகு மிகவும் அமைதியாக இருந்துள்ளார்.

பள்ளியில் சக மாணவிகளிடம் தனது அப்பாவின் பாசத்தை பற்றியும், அவருடன் கழித்த நினைவுகளை பற்றியும் தினமும் உருக்கமாக பேசி வந்துள்ளார். "அப்பா இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை" என்று கூறி அவர் அடிக்கடி கண் கலங்கியுள்ளார்.

சக மாணவிகளும், ஆசிரியைகளும் அவருக்கு பல்வேறு விதங்களில் ஆறுதல் கூறிய போதிலும், மாணவியால் தனது தந்தையின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ரெயில் முன் பாய்ந்து தற்கொலை​

இந்த நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவி சாதனா வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், வீட்டிற்கு செல்லாமல், வீட்டிற்கு அருகே தனது தந்தை கார்த்திக் ரெயில் மோதி இறந்த அதே இடத்திற்கு சென்று சோகமாக நின்றுள்ளார்.

​அப்போது டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மாணவி சாதனா இந்த ரெயில் முன் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சாதனா பரிதாபமாக உயிரிழந்தார்.

​இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மாணவி சாதனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிற்கதியில் தாய்

6 மாதங்களுக்கு முன்பு கணவரை ரெயில் விபத்தில் பறிகொடுத்த நிலையில், தற்போது ஒரே மகளையும் அதே இடத்தில் பறிகொடுத்த ஆசிரியை ஜானகி, மகளின் உடலை பார்த்து கதறி அழுதது அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

தந்தை இறந்த சோகத்தில், அவர் பலியான அதே இடத்தில் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருப்பூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

X