

கட்டிலில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த கணேசனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கல்லிடைக்குறிச்சி கரண்டை இடக்குடி தெரு காமாட்சியம்மன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 47). தச்சுத் தொழிலாளி.
இவர் நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள வடக்கு வாகைகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு மரப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார். இவர் அந்த மரப்பட்டறையின் மாடியில் உள்ள அறையில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு அவர் வேலையை முடித்துவிட்டு வழக்கம்போல் மாடியில் தூங்கி உள்ளார். இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் அவர் கட்டிலில் முகத்தில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து மானூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக நெல்லை ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு பிஸ்வஜித் பாண்டா மற்றும் மானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கட்டிலில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த கணேசனின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மரப்பட்டறையில் அவருடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கணேசன் எதற்காகக் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.