திருச்சியில் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவனை கொன்ற மனைவி

மதுவுக்கு அடிமையான செந்தில்குமார் தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
திருச்சியில் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவனை கொன்ற மனைவி
Published on: 
Summary

குடிபோதையில் தகராறு செய்த கணவரை தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஏர்போர்ட் கரிகாலன் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 49), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கலாராணி (41). இந்த தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் 8-ம் வகுப்பும், இளைய மகன் 5-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

மது அருந்தி தகராறு

இந்தநிலையில் மதுவுக்கு அடிமையான செந்தில்குமார் தினமும் போதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் அளவுக்கு அதிகமாக மது அருந்தி கொண்டு வீடு திரும்பினார். பின்னர் மனைவியிடம், தனது சகோதரர் குழந்தைகளுக்கு ஏன் உணவு கொடுக்க வில்லை என கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இதில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு மூண்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் கணவர் மீது கலாராணிக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

கொலை

பின்னர் போதையில் செந்தில்குமார் படுத்து தூங்கி விட்டார். நள்ளிரவு ஒரு மணிக்கு கோபத்தின் உச்சியில் இருந்த கலாராணி வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டார். இதில் செந்தில்குமாரின் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு வெளியேறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஏர்போர்ட் போலீசார் கலா ராணியை கைது செய்தனர். மேலும் செந்தில்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X