நீலகிரியில் நேரக் கட்டுப்பாடு: விடிய விடியக் காத்திருந்த வாகனங்கள்- பயணிகள் தவிப்பு

சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றன.
CAR
Published on: 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைப்பாதையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நள்ளிரவு நேரத்தில் மண் சரிவுகள் ஏற்பட்டன.

இந்த மண் சரிவில் ஒரு அரசு பஸ் சிக்கியதில் அங்கு பணியில் இருந்த டிரைவர் உயிரோடு மண்ணில் புதைந்து பலியானார்.

நீலகிரி மலைப்பகுதியில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே ரெட் அலர்ட் விடுத்து உள்ளது. இதனால் அங்கு தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 2 நாட்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊட்டி மற்றும் கோத்தகிரி மாலைப்பாதைகளில் வாகன போக்குவரத்திற்கு அனுமதி இல்லை என்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

அணிவகுத்த வாகனங்கள்

இதனால் ஊட்டி மற்றும் கோத்தகிரி சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ஓடந்துறை பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வரை சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நின்றன.

எனவே மேட்டுப்பாளையம் ரோட்டில் கடும் போக்குவரத்து நெருக்கடி காணப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் நீலகிரி மாவட்டத்துக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. மேலும் அந்த பகுதியில் வாகனங்களையும் சீராக கடந்து செல்ல ஏதுவாக போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அப்போது அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகளிடம், மலைப்பாதையில் வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்க வேண்டும். கொண்டை ஊசி வளைவுகளில் முன்னால் செல்லும் வாகனங்களை முந்திச் செல்லக் கூடாது. மலைப்பாதையில் பயணிக்கும் வாகனஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றி எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com