கடமலைக்குண்டுவில் மலைகிராமத்தினர் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்

மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இந்த வனப்பகுதி வருவதாக கூறி அங்கு பட்டா இல்லாத நபர்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடமலைக்குண்டுவில் மலைகிராமத்தினர் இன்று முதல் காத்திருப்பு போராட்டம்
Published on: 
Summary

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடமலைக்குண்டுவில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் கடமலைக்குண்டுவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடினர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட வருசநாடு, சிங்கராஜபுரம், நரியூத்து, பசுமலைதேறி, பூசனூத்து உள்ளிட்ட 98 மலை கிராமங்களில் பட்டா இல்லாத குடும்பங்களை வெளியேற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

புலிகள் காப்பகம்

மேகமலை புலிகள் காப்பக பகுதியில் இந்த வனப்பகுதி வருவதாக கூறி அங்கு பட்டா இல்லாத நபர்களை வெளியேற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மலைகிராம மக்கள், அரசியல் கட்சியினர் தன்னார்வல அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

தமிழக அரசு

பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வனத்தையும், விலங்குகளையும் பாதுகாத்து வருவதால் தங்களுக்கு 2006 வன உரிமை சட்டப்படி பட்டா வழங்க வேண்டும், வனத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும், இப்பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்து மீண்டும் மறு அளவீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

காத்திருப்பு போராட்டம்

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடமலைக்குண்டுவில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலையில் கடமலைக்குண்டுவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடினர். புதிய பஸ் நிலைய வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு வருகிற 29ந் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அப்போது தமிழக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உணவு

கடந்த 3 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் தாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வரும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக தெரிவித்தனர். போராட்ட களத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டு இதே இடத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர உள்ளதாகவும் கூறினர்.

போலீசார் குவிப்பு

போராட்டத்தை முன்னிட்டு கமடலைக்குண்டுவில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஏ.டி.எஸ்.பி. மகேஷ்குமார் தமைமையில் திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்த 6 டி.எஸ்.பி.க்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 55 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை, சிறப்பு காவல்படை உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வனத்துறை அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்

இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் கடமலைக்குண்டு கிராமத்திற்கு வரும் வாகனங்கள் மேலப்பட்டி வழியாக திருப்பி விடப்பட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. போராட்டம் நடைபெறும் பகுதி அருகே வஜ்ரா வாகனம், ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

வருசநாடு

கடமலைக்குண்டு, கண்டமனூர், வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 6 டாஸ்மாக் கடைகள், மன மகிழ்மன்றம் ஆகியவையும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com