

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன்னைத் தலைவர் என்று கூறிக்கொள்ள வெட்கப்பட வேண்டும் என்று நடிகையும் பாஜக-வை சேர்ந்த அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் கொண்டதாக கூறப்படும் வார்த்தை ஒன்றை குறிப்பிட்டார்.
இது, சமூகத்தில் உள்ள பெண்களை மிகவும் இழிவான கண்ணோட்டத்தில் குறிப்பிடுவதாக சமூக வலைதளத்தில் சர்ச்சையானது.
இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மீது பெண்கள் மீது மானபங்கம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 9 பிரிவுகளில் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை உதயநிதி ஸ்டாலினை, அவரின் வீட்டிற்கே சென்று போலீசார் கைது தஞ்சை அழைத்துச்சென்றனர். பின்னர் இரவு 8 மணியளவில் விசாரணைக்கு பிறகு அவரை விடுவித்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து தமிழக பாஜகவின் துணைத் தலைவரான குஷ்பு சுந்தர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ நான் பலமுறை பாலினப் பாகுபாடு நிறைந்த கருத்துக்களுக்கு ஆளாகியிருக்கிறேன்.
பெண் வெறுப்பும் பாலினப் பாகுபாடும் திமுகவின் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. எனக்கு இதில் துளியும் ஆச்சரியமில்லை. இது போன்ற பெண் வெறுப்பு மற்றும் பாலினப் பாகுபாடு நிறைந்த கருத்துக்களை நான் பார்த்திருக்கிறேன்.
மேலும், திமுகவில் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதையும் நான் பார்த்திருக்கிறேன். எனவே, இது இறுதியாக நீங்கள் முன்னெடுத்துச் செல்லும் ஒரு மரபு.
உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து இதை நான் எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவர் இளைஞர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்று நினைத்தேன்.
அவர் முன்னாள் துணை முதல்வர் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருந்தவர், அதனால் இந்த மனிதர் வித்தியாசமாக இருப்பார் என்று நினைத்தேன்.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் இது போன்ற மிகவும் அநாகரிகமான, தரம் தாழ்ந்து பேசி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும், அவரிடம் ஒரு துளி வருத்தம் இருந்ததாக கூட தெரியவில்லை.
ஒரு பொது மேடையில் ஒரு பெண்ணை இழிவாகப் பேச உங்களுக்கு யார் பிறப்புரிமை கொடுத்தது? இது உதயநிதி ஸ்டாலினுக்கு மட்டும் அல்ல, எல்லா அரசியல் கட்சிகளிலும் இதுதான் நிலை.
உங்கள் கருத்தை நிரூபிக்க இன்னும் எவ்வளவு காலத்திற்கு ஒரு பெண்ணை இழிவாகப் பேசப் போகிறீர்கள்?
ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு மரியாதைக் குறைவாகப் பேசவும், ஒரு பெண்ணின் தோளில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு, ‘நான்தான் பலமானவன், நான்தான் தலைவர்’ என்று சொல்லவும் ஒரு ஆண் எவ்வளவு பலவீனமாக இருக்க வேண்டும்?
இங்கே உங்களை நீங்களே தலைவர் என்று அழைத்துக்கொள்வதற்கு வெட்கமாக இல்லையா?
சட்டமன்ற தேர்தல்
மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக உறுப்பினர்களே கட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்களது சொந்தக் குடும்ப உறுப்பினர்களே திமுகவுக்கு வாக்களிக்கவில்லை.
எனவே, இங்கே கைதட்டுவது பொதுமக்கள் அல்ல. இங்கே விசில் அடிப்பது பொதுமக்கள் அல்ல. கூச்சலிட்டு, கைதட்டி, விசில் அடித்து, ஒரு பெண் நிந்திக்கப்படுவதைப் பார்த்து இந்த விதமான இன்பம் காணும் உங்கள் சொந்த சம்சாக்கள் (முகஸ்துதி செய்பவர்கள்)தான் இதைச் செய்கிறார்கள்.
இது அவர்களுடைய பெண் வெறுப்பு மற்றும் அசிங்கமான மனப்பான்மையைத்தான் காட்டுகிறது.
திமுக ஒரு கற்பனை பலூனில் வாழ்ந்து வந்தது. தங்களை யாரும் தொட முடியாது என்று அவர்கள் நினைத்திருந்த அந்த பலூன் உடைந்துவிட்டது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது,” என்று அவர் கூறினார்.