

ஊருக்குச் சென்றுள்ள பல பேராசிரியர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில் மேலும் பல பேராசிரியர்களின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடி பகுதியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலை கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் திருவாரூர் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு தீபாவளி பண்டிகை விடுமுறை விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பேராசிரியர் தங்கும் வீடுகளில் தங்கி பணிபுரிந்து வரும் நூற்றுக்கணக்கான பேராசிரியர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் இங்குள்ள 7-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களையும் ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
இந்த நிலையில் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட சென்ற பேராசிரியர்கள் வீடு திரும்பினர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தது.
இது குறித்து 7 பேராசிரியர்கள் நன்னிலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து நன்னிலம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ஊருக்குச் சென்றுள்ள பல பேராசிரியர்கள் இன்னும் வீடு திரும்பாத நிலையில் மேலும் பல பேராசிரியர்களின் வீட்டிலும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளதா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.