

திருவள்ளூர் அமோனியா வாயுக் கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க ஆலை உரிமையாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேரில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் ஆலையில் கடந்த ஜூன் மாதம் 21ம் தேதி நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் ஜோசப் ஜெகன், மோகன் மற்றும் ஆலை மேலாளர் டேனியல் டைட்டஸ் சிங் ஆகிய 3 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, இந்த இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்று பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி வழக்கமான கையெழுத்திட வேண்டும் என்றும், காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஜூன் 21ம் தேதி ஆலையில் ஏற்பட்ட இந்த அமோனியா கசிவில் சிக்கி 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டது.
முன்னதாக மூவரின் ஜாமின் மனுவையும் திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தநிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.