

பொதுமக்கள் மற்றும் பக்தர்களை விரட்டி கடிக்கும் குரங்கினை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
திருப்போரூர் பகுதியையொட்டி பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் காடுகள் உள்ளன. உணவுக்காக அவ்வப்போது இதிலிருந்து வெளியேறும் குரங்குகள் கூட்டம் திருப்போரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இவ்வாறு இடம் பெயரும் குரங்குகள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதுடன் அதனை விரட்டும் நபர்களை பாய்ந்து கடிக்கவும் செய்கிறது.
இந்நிலையில் திருப்போரூர் முருகன் கோவிலையொட்டி உள்ள மாட வீதியில் ஏராளமான குரங்குகள் கடந்த சில நாட்களாக சுற்றி வருகின்றன. இந்த குரங்குகள் கூட்டம் கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களின், பைகளை பறிப்பது, அவர்கள் கொண்டுவரும் அர்ச்சனை பைகளையும் பறித்து அச்சுறுத்தி வருகின்றன.
இதற்கிடையே பொது மக்கள் மற்றும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை குறிவைத்து குறிப்பிட்ட ஒரு குரங்கு மட்டும் ஆக்ரோஷமாக விரட்டி, விரட்டி கடிக்கிறது. இன்று காலை கோவில் அருகில் வயதான ஒருவரை கடித்து விட்டு தப்பி ஓடி விட்டது. இதுவரை இந்த குரங்கு சுமார் 20-க்கும் மேற்பட்டோரை கடித்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
பொதுமக்கள் மற்றும் பக்தர்களை விரட்டி கடிக்கும் குரங்கினை கூண்டு வைத்து பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.