விடுமுறைக்கு துபாயிலிருந்து வந்த வாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

தகராறு கொலையில் முடிந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விடுமுறைக்கு துபாயிலிருந்து வந்த வாலிபரை ஓட ஓட விரட்டி  வெட்டிக்கொலை
Published on: 
Summary

குடும்பத்தினரின் கண் முன் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கள்சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குமரி மாவட்டம் திங்கள் சந்தை திட்டுவிளை காட்டு விளை பகுதியை சேர்ந்தவர் உசேன். இவரது மகன் சமீம் (வயது28). இவர் துபாயில் கார் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.

வெளிநாட்டில் வேலை பார்த்தவர்

சமீம் கடந்த விடுமுறையில் வெளிநாட்டில் இருந்து கடந்த 15-ந்தேதி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் தங்கியிருந்த வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் சிலர் அவ்வழியாக சென்றனர்.

சமீம் அவர்களிடம் எதற்காக இங்கு நடமாடிய படி உள்ளீர்கள்? என்று கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வடமாநில வாலிபர்கள் தங்களை அழைத்து வந்த காண்டிராக்டரிடம் தெரிவித்தனர்.

தகராறு

இந்தநிலையில் இது தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் வாடகைக்கு குடியிருந்து வந்த வீட்டின் உரிமையாளரான மூர்த்தி என்பவரின் மகன் முகேஷ், அகில் ஆகிய இருவரும் சமீமிடம் வந்து தட்டிக்கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

பின்பு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இது குறித்து முகேஷ் தனது நண்பரான கதிரவன் என்பவரன் மகனான மற்றொரு முகேசிடம் தெரிவித்தார். அவரும் அங்கு வந்தார். அப்போது சமீம் மற்றும் எதிர்தரப்பை சேர்ந்த 3 பேருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு முற்றியது.

ஓட ஓட விரட்டி சரமாரி வெட்டினர்

அதில் ஆத்திரமடைந்த அவர்கள் 3 பேரும், தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சமீமை வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சமீம், அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஓடினார்.

ஆனால் அவர்கள் சமீமை விடாமல் துரத்திச்சென்று ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். அப்போது சமீமின் குடும்பத்தை சேர்ந்த பெண்கள் கூச்சலிட்டபடி ஓடி வந்து, சமீமை வெட்டியவர்களை தடுத்தனர்.

படுகொலை

மேலும் அவரை விட்டு விடுமாறு கெஞ்சினார்கள். ஆனால் கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் சமீமை பிடித்துக்கொண்டு அரிவாளால் வெட்டினர். மேலும் கத்தியால் நெஞ்சு பகுதியில் சரமாரி குத்தினர். இதில் சமீமின் உடலில் நெஞ்சு, தோள்பட்டை என பல இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

முக்கியமாக அவரது நெஞ்சு பகுதி பிளந்து விட்டது. இதனால் சமீம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து அகில், முகேஷ் உள்ளிட்ட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

எஸ்.பி. விசாரணை

குடும்பத்தினர் கண் முன் சமீம் கொடூரமான முறை யில் வெட்டி கொலை செய்யப்பட்டது குறித்து இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொலை குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அன்சுல் நாகரும் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினார். பின்பு கொலை செய்யப்பட்ட சமீமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளுக்கு வலைவீச்சு

சமீமை கொலை செய்த அகில், முகேஷ் உள்ளிட்ட 3 பேரும் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீம் கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. கொலையில் தொடர்புடைய ஒரு முகேசுக்கும், சமீமுக்கும் இடையே மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்டது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தனது வீட்டில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்களிடம் பிரச்சினை செய்ததை காரணமாக வைத்து சமீமிடம் அவர் தகராறு செய்துள்ளார். அந்த தகராறு கொலையில் முடிந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பரபரப்பு

சமீம் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குடும்பத்தினரின் கண் முன் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திங்கள்சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ வைரல்

சமீம் அவரது குடும்பத்தினரின் முன் ஓடஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட காட்சி அப்பகுதியில் இருந்து சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையில் பயங்கரமாக உள்ளது.

X