ஆவின் விநியோகத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை: நிர்வாகம் அறிவிப்பு

பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.
ஆவின் பால்
ஆவின் பால்
Published on: 
Summary

ஆவின் நிர்வாகத்தின் உடனடி நடவடிக்கையால், வேலைநிறுத்தம் காரணமாக ஏற்பட்ட சிரமங்கள் தீர்க்கப்பட்டு, சென்னையில் பால் விநியோகம் வழக்கம்போல் தொடர்ந்தது. ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் வாகனங்களை இயக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னை மாநகரில் ஆவின் நிறுவனம் மூலம் நாள்தோறும் பொதுமக்களின் பால் மற்றும் பால் பொருட்களின் தேவைகளை உறுதி செய்யும் வகையில், சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் பொருட்கள், 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்கள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 16.10.2026 அன்று ஒப்பந்த வாகன உரிமையாளர்கள் முன்னறிவிப்பின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்கமாக இயக்கப்படும் 31 ஒப்பந்த வாகனங்களில் 5 வாகனங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. தொடர்ந்து, பொதுமக்களுக்கான பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தில் எவ்வித தடைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், ஆவின் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆவினுக்குச் சொந்தமான மற்றும் மொத்த விற்பனையாளர்களின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு, அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது.

ஒப்பந்த வாகனங்கள்

ஆவின் நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளின் மூலம், சென்னை மாநகரில் உள்ள அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களிலும் பொதுமக்களுக்குத் தேவையான பால் மற்றும் பால் பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், 21.10.2026 அன்று ஆவின் நிர்வாகத்தைச் சந்தித்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த வாகன உரிமையாளர்கள், போராட்டத்தைக் கைவிட்டு மீண்டும் வாகனங்களை இயக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து, இன்று முதல் ஒப்பந்த வாகனங்கள் மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.

எனவே, கடந்த ஐந்து நாட்களாக, ஆவின் நிர்வாகம் மேற்கொண்ட துரிதமான மாற்று நடவடிக்கைகளின் காரணமாகச் சென்னை மாநகரில் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகம் எவ்விதப் பாதிப்புமின்றி பொதுமக்களுக்குத் தேவையான

அனைத்துப் பால் மற்றும் பால் பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com