காதல் திருமணம் செய்ததால் மோதல்- போதையில் தகராறு செய்த தச்சு தொழிலாளி குத்திக்கொலை

இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
காதல் திருமணம் செய்ததால் மோதல்- போதையில் தகராறு செய்த தச்சு தொழிலாளி குத்திக்கொலை
Published on: 
Summary

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே காதல் திருமணம் செய்த பிரச்சினையில் இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா பொன்நகர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது46). இவர் தச்சு வேலை பார்த்து வந்தார். இவருக்கு தேவகனியா என்ற மனைவியும், கீர்த்தனா, கீர்த்திகா, சுந்தரம்மாள், ரசிகா ஆகிய 4 மகள்களும், சுந்தரேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் 2-வது மகள் கீர்த்திகா, தனது உறவுமுறையான தாய்மாமன் சிவக்குமாரின் மகன் ரூபன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை செந்தில்குமார் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மதுபோதை

இதனால் சிவக்குமார் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில், நேற்று சிவக்குமார் தனது மனைவி அனிதா மற்றும் இளைய மகன் லோகேஷ்வரன் ஆகியோருடன் தங்கம்மாள்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையறிந்த செந்தில்குமார் நேற்று இரவு மதுபோதையில் சிவக்குமாரின் வீட்டிற்குச் சென்றார். அங்கு அனிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செந்தில்குமார், ஆத்திரத்தில் அவரை கத்தியால் குத்தினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சிவக்குமார் மற்றும் அவரது மகன் லோகேஷ்வரன் ஆகியோர் செந்தில்குமாரை தடுத்தனர். ஆனால் அவர் கேட்காமல் மீண்டும் கத்தியால் குத்த வந்தார். இதனால் அவரிடம் இருந்த கத்தியைப் பறித்து அவரை கழுத்து, நெற்றி, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் குத்தினார்.

கொலை

இது குறித்து தகவல் அறிந்ததும் செந்தில்குமாரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த செந்தில்குமாரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே செந்தில்குமார் கத்தியால் குத்தியதில் காயமடைந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி அனிதா, மகன் லோகேஷ்வரன் ஆகியோர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமார் மற்றும் லோகேஷ்வரனை கைது செய்தனர். காதல் திருமணம் செய்த பிரச்சினை கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X