

சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் விஜய் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்க திட்டத்தின் கீழ் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீட்டில் சாலைகளில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள 110 விதியின் கீழ் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக ரூ.154.16 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை (டி.பி.ஆர்.) தயாரிக்கப்பட்டு, அதில் கண்காணிப்புக் குழுவின் பரிந்துரையின்படி முதற்கட்டமாக ரூ.130.19 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாநகராட்சிப் பகுதிகளில் புதிதாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளும்போது அனைத்து தார்ச்சாலைகளையும் முழுவதும் அகழ்ந்தெடுத்த பிறகே புதிதாக தார்ச்சாலை அமைத்திட வேண்டும்.
சாலையில் புதிதாக எவ்வளவு கனத்தில் தார்ச்சாலை அமைக்கப்படுகிறதோ அதே அளவிற்கு அகழ்ந்தெடுக்கும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதனால் ஏற்கனவே சாலை எந்த அளவு உயரமாக உள்ளதோ புதிய தார்ச்சாலை அமைத்த பிறகும் அதே உயரம் பராமரிக்கப்படும். சிறப்பு எந்திரத்தால் அகழ்ந்தெடுக்க முடியாத ஓரப் பகுதிகளில் வேறு எந்திரங்கள் அல்லது பணியாளர்களால் நேரடியாக அகற்றப்பட வேண்டும்.
இதனால் கட்டிடங்கள் சாலை மட்டத்திற்கு கீழ் செல்வதை தவிர்க்க முடியும். பழுதடைந்த பழைய தார் அடுக்கை அகற்றி புதிய தார்ச்சாலை அமைப்பதால் சாலையின் உயரத்தை ஏற்கனவே உள்ள சாலையின் உயரத்திற்கு சமமாக உருவாக்கலாம்.
மேலும், சாலையிலுள்ள மேடுபள்ளங்களை சரி செய்வதோடு, சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் அமைக்கப்படும்.
மேற்படி, அகழ்ந்தெடுக்கும் பணி செய்த பிறகுதான் புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன என்பதை ஜி.பி.எஸ். பதிவுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்தபின் புதிய சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.
சரியாக அகழ்ந்தெடுக்கும் பணி செய்யப்படுகிறதா என்பதை சாலைப்பணி மேற்கொள்ளும் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை கண்காணிப்பதற்கு உயர் அலுவலர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பழைய சாலைகளில் சரியாக அகழ்ந்தெடுக்கும் பணி மேற்கொள்ளாமல் புதிய தார்ச்சாலை அமைத்தால், பணி மேற்கொண்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.