சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கும் முன் அனைத்து கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும் - சிபிஎம்

ஆய்வு வரம்புகள் (Terms of reference) உள்ளிட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.
cpim
Published on: 

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு (சமூகநீதி சர்வே)நடத்துவதற்காக சமூகநீதி ஆணையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்கு முன் ஓய்வுபெற்ற நீதிபதி மற்றும் ஐஏஎஸ் தலைமையில் சமூகநீதி ஆணையம் அமைக்கப்படும் என்றும், மத்திய அரசு நடத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, 2027-ம் ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் இந்த ஆணையம் முறையாக அமைக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதலானது அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்று சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இது குறித்து சிபிஎம் தலைவர் பெ சண்முகம் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது

மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வை நடத்துவதென்றும், இதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் இக்கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன.

முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம்

இந்தப் பின்னணியில் தமிழ்நாடு அமைச்சரவையின் இந்த முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.அதே சமயம், இதன் ஆய்வு வரம்புகள் (Terms of reference) உள்ளிட்ட முழுமையான விபரங்கள் வெளியிடப்படுவது அவசியம் என்று சிபிஐ(எம்) வலியுறுத்துகிறது.

இதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமெனில் ஆணையம் தன் பணியைத் தொடங்குவதற்கு முன்பே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனைகளைப் பெற்றால் சமூக, பொருளாதார நிலைமைகளை முழுமையாக வெளிக்கொணரவும், அதனடிப்படையில் சமூக -பொருளியல் நீதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவும்.

எனவே, இதுகுறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

என்று தெரிவித்துள்ளார்.

X