‘90களில் தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் கலவரங்கள் வெடிக்க காரணமே கமல்ஹாசன்தான்’ - ‘சண்டியர்’ தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி பேட்டி!

சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டது. அந்த பெயரில் என்ன தவறு இருக்கிறது?
‘தமிழ்நாட்டில் 10 ஆண்டுகள் தொடர்ந்து கலவரங்கள் வெடிக்க காரணமே தேவர் மகன் படம்தான்’ - ‘சண்டியர்’ தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணசாமி பேட்டி!
Published on: 

‘சித்தா’ பட இயக்குநர் எல்.யு.அருண் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சண்டியர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு பலரிடையே விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. இதற்கு முன்னதாக 1990-களிலும் இந்த தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியது. தேவர் மகன் படத்திற்கு முதலில் இந்த தலைப்புதான் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடும் எதிர்ப்பு தெரிவிக்க, பின்னர் அந்த தலைப்பு கைவிடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கமலின் மற்றொரு படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த தலைப்பு அறிவிப்பு வெளியானதில் இருந்தே, இதற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது பல்வேறு சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கிறார்.

இந்நிலையில் இந்த தலைப்புக்கு அனுமதி தரக்கூடாது, இந்த தலைப்பை தடை செய்யவேண்டும் என அமைச்சர் ராஜ்மோகனிடம் இன்று மனு அளித்தார்.

இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது;

கொடியங்குளம் கலவரம்

“இதே கமல்ஹாசன் 1992ம் ஆண்டு தேவர் மகன் என்ற பெயரில் படம் எடுத்தார். அப்படத்தில் ஒரு சமூகத்தினரை போற்றும் வகையில் பாடல் வந்தது.

அந்தப் பாடலை அந்த மக்கள் மட்டும் வசிக்கும் இடத்தில் போட்டால் பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு கிராமத்தில் ஒரு சமூகத்தினர் மட்டும் இருப்பதில்லை.

அந்த படம் வெளியாகி முடிந்துவிட்டது. ஆனால், அதனால் பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்பட்டன. இதனால் ஏற்பட்ட ஒரு மோதலில் பெண் ஒருவரின் கையும் வெட்டப்பட்டது. அதன்பிறகுதான், கொடியங்குளம் பிரச்சனைகள் எல்லாம் வந்தது.

10 ஆண்டுகள் தொடர்ந்து கலவரம்

அவர் ஒரு பிரபலமான நடிகர். அவர் சொல்லும் கருத்துகள் எளிதாக மக்களிடையே சென்று செல்லும். நல்லது செல்கிறதோ இல்லையோ, கெட்ட கருத்துகள் எளிதாக சென்றடைகின்றன.

1993ம் ஆண்டிற்கு பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து 10 ஆண்டுகள் பிரச்சனைகள் நடக்க காரணமே அவரது படம்தான்.

சுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக்கழகம் உருவாக்கப்பட்டது. அந்த பெயரில் என்ன தவறு இருக்கிறது? அந்த பெயருக்கு எதிர்ப்பு வந்தது. சில பெயர்களுக்கு பிரச்சனை இருக்கிறது. அதனால் இதுபோன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

சண்டியர்களை உருவாக்கக்கூடாது

சண்டியர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வன்மத்தை திணிக்க நினைக்கிறார் கமல்ஹாசன்; விரோதத்தை வளர்க்க நினைக்கிறார். இளைஞர்களை சண்டியராக்க முற்படுகிறார். தமிழ்நாட்டில் பட்டதாரிகளை உருவாக்க வேண்டும்; சண்டியர்களை உருவாக்கக்கூடாது.

இந்த வேலையை திரைப்படம் வாயிலாக கமல் செய்வதை அனுமதிக்க முடியாது என்பதற்காகத்தான் இந்த எதிர்ப்பு.” என தெரிவித்தார்.

X