

பெண்கள் சொகுசு காரில் ஜவுளிக்கடைக்கு வந்து பட்டு சேலைகளை தேர்வு செய்வது போல நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி பட்டு சேலைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள செட்டிகாரிச்சியூர் பகுதியில் கைத்தறி பட்டு சேலைகள் தயாரித்து ஜெயரங்கநாதன் என்பவர் விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது ஜவுளிக் கடைக்கு சொகுசு கார் மூலம் 5 பெண்கள், ஒரு ஆண் ஆகியோர் கும்பலாக வந்து பட்டு சேலைகள் வாங்குவது போல் நடித்து ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 3 கைத்தறி பட்டு சேலைகளை நைசாக திருடிச் சென்றனர்.
அவர்கள் கைத்தறி பட்டு சேலைகளை திருடி வேகமாக தப்பி செல்லும் காட்சி சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து மேச்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சொகுசு காரில் வந்து இங்கு கைவரிசை காட்டிய பிறகு அதே கும்பல் செல்லும் வழியில் உள்ள ஓமலூர் பைபாஸ் சாலையில் இயங்கும் மற்றொரு ஜவுளி கடையிலும் கைவரிசை காட்டியது.
ஓமலூர் பைபாஸ் சாலையில் சிக்கனம்பட்டியை சேர்ந்த பட்டுத்தறி உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் காரில் அதே கும்பல் இந்த ஜவுளிக்கடைக்கு வந்தனர். அப்போது கடையில் கோவிந்தராஜியின் மகன் சபரி (26) என்பவர் இருந்தார். கடையில் இருந்த ஊழியர்களிடம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பிலான உயர்தர கைத்தறி பட்டு சேலைகளை காட்டுமாறு கேட்டுள்ளனர். ஊழியர்களும் பல ரகங்களை எடுத்து காண்பித்து கொண்டு இருந்தனர்.
அப்போது அதில் ஒரு பெண் தனியாக சென்று அமர்ந்து சேலைகளை காட்டுமாறு கூறினார். ஊழியர்கள் கவனத்தை அவர் பக்கம் திருப்பி சமயம் பார்த்து மற்ற 2 பெண்கள் எழுந்து நின்று சேலைகளை மறைத்துக்கொண்டு பாதுகாப்பு அரண் போல நின்றுள்ளனர். அந்த வாய்ப்பை பயன்படுத்தி அமர்ந்திருந்த பெண்கள் 2 பேர் தாங்கள் தேர்வு செய்து வைத்திருந்த 4 பட்டு சேலைகளை கால்களுக்கு இடையில் நைசாக மறைத்து வைத்துக்கொண்டனர்.
பின்னர் சேலைகள் எல்லாம் நன்றாக இருக்கிறது, நாளை வந்து எடுத்துக் கொள்கிறோம் என்று மிக இயல்பாக கூறிவிட்டு திருடிய பட்டு சேலைகளை மடியில் கட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அவர்கள் சென்ற பிறகு ஊழியர்கள் சேலைகளை அடுக்கி வைத்தபோது தான் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 4 கைத்தறி பட்டு சேலைகள் மாயமாகி இருப்பது தெரியவந்தது. பதறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தபோது, அந்த பெண்கள் காரில் சென்று விட்டது தெரியவந்தது.
கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பெண்கள் அனைவரும் திட்டமிட்டு சாமர்த்தியமாக காரியத்தை முடித்தது அம்பலமானது.
இது குறித்து சபரி ஓமலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கைவரிசை காட்டிய அந்த கும்பல் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
பெண்கள் சொகுசு காரில் ஜவுளிக்கடைக்கு வந்து பட்டு சேலைகளை தேர்வு செய்வது போல நடித்து ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி பட்டு சேலைகளை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.