சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் பயங்கரம் - தவெக பிரமுகர் ஓட ஓட வெட்டிக்கொலை... 5 பேர் கைது!
உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டபோது
Published on

சென்னை அடையாறு சாஸ்திரி நகர் வண்ணாந்துறைப் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். அ.தி.மு.க.வில் 174வது தெற்கு வட்டக் செயலாளராக இருந்த கண்ணன், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

இந்த நிலையில் நேற்று இரவு (செப்.5) 9 மணி அளவில் வண்ணாந்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த கண்ணனை மர்ம நபர்கள் சுற்றி வளைத்தனர். அவர்களது கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

இதைபார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன கண்ணன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் ரவுடி கும்பல் கண்ணனை ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டியது.

இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார்.

உறவினர்கள் முற்றுகை

இது பற்றி தகவல் கிடைத்ததும் சாஸ்திரி நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கண்ணன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அப்பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர்கள் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரணம் என்ன?

போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கண்ணன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

திருவான்மியூர் பகுதியில் நடைபெற்ற கொலை ஒன்றில் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கண்ணனை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த கண்ணன் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கண்ணன் சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தவெக-வில் இணைந்திருந்ததால், அவரது அரசியல் நடவடிக்கைகள் பிடிக்காமல் எதிராளிகள் தீர்த்து கட்டினார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

5 பேர் கைது

சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஐந்து பேரை கைது செய்து விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com