

சென்னையின் பொதுப்போக்குவரத்து வரலாற்றில் பசுமைப் புரட்சியை வேகப்படுத்தும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தனது முக்கிய பணிமனைகளில் உயர் அழுத்த மின் கட்டமைப்பை நிறுவ மின்-ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.
எதிர்கால மின்சாரப் பேருந்துகளின் தடையற்ற இயக்கத்திற்கும், அதிவேக சார்ஜிங் தேவைகளுக்கும் வலுசேர்க்கும் நோக்கில் ஆவடி, பெரம்பூர் மற்றும் கே.கே. நகர் ஆகிய மூன்று பணிமனைகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அங்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் வழிகாட்டுதல்படி, வெளிப்புற ஆயில் கூல்டு மின்மாற்றி மற்றும் அதிநவீன வேக்யூம் சர்க்யூட் பிரேக்கர், பேனல்கள் முழுமையாக நிறுவப்பட உள்ளன.
ரூ.1 லட்சம் முன்வைப்புத் தொகையுடன் கோரப்பட்டுள்ள இந்த மின்-டெண்டருக்கு வரும் நவம்பர் 4-ஆம் தேதி பிற்பகல் 2:30 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாட்டின் முன்னணி பெருநகரங்களான பெங்களூருவின் பிஎம்டிசி, டெல்லியின் டிடிசி மற்றும் மும்பையின் பெஸ்ட் ஆகிய போக்குவரத்துக் கழகங்கள் தங்களின் பணிமனைகளில் இதுபோன்ற 33 கே.வி. உயர் அழுத்த துணை மின் உள்கட்டமைப்புகளை நிறுவி ஆயிரக்கணக்கான மின்சாரப் பேருந்துகளை வெற்றிகரமாக இயக்கி வருகின்றன.
தலைநகர் சென்னையில் மெட்ரோ ரயில் நிலைய பணிமனைகளில் மட்டுமே இதுவரை பயன்பாட்டில் இருந்துவந்த இந்த உயர்தொழில்நுட்ப மெகா மின் விநியோகக் கட்டமைப்பு,
தற்போது மாநகரப் பேருந்து பணிமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவது சென்னை மக்களின் சுற்றுச்சூழல் பயணத்திற்கு மிக முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.