தற்காலிக பணி நியமனத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 18-ந்தேதி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

அனைத்து பணியாளர்களையும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்த வேண்டும்.
Nurses Protest
Published on
Summary

தமிழகத்தில் காலிப் பணியிடங்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அரசு எடுத்துள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் சசிகலா, பொதுச் செயலாளர் சுபின், பொருளாளர் ஹேமச்சந்திரன் ஆகியோர் அறிக்கையை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் அறிக்கை:

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் பணியிடங்களில் தற்போது காலியாக உள்ள 4,724 பணியிடங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் அரசு நியமிக்க உள்ளது. மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் இவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியர் தட்டுப்பாடு ஒரு புறம் இருக்க, சுமார் 4.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழகத்தில் இருக்கும் நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் அரசு வேலைக்காக காத்திருக்கிறார்கள்.

இந்த தற்காலிக முறையில் பணி அமர்த்தப்படும் செவிலியர்களுக்கு வரும் காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்த தற்காலிக செவிலியர்கள் பொது சுகாதார துறையின் கீழ் கிராமப் புறங்களில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி அமர்த்தப்படும் நிலையில், கிராமப்புறங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.

மருத்துவத் துறையின் ஊழியர்கள் நிரந்தர தன்மையோடு இருந்தால் மட்டுமே அந்த துறை தொடர்ந்து நிரந்தர தன்மையுடன் இயங்கும் எனவே அரசு, பணியமர்த்தப்படும் ஊழியர்களின் நலனையும் பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிட வேண்டும்.

அனைத்து பணியாளர்களையும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்த வேண்டும். தற்காலிக பணி நிரந்தர ஆணையை திரும்பப் பெறக் கோரி மாவட்ட தலைநகரங்களில் வருகிற 18-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com