

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள முக்கிய குற்றவாளி நிஷாந்தின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 1 வரை காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் 4 வரை நீட்டித்து மதுரை முதலாவது விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை போலீசாரால் திங்களன்று நிஷாந்த் கைது செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து செவ்வாய்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சமீபத்தில் மதுரை புறவழிச்சாலையில் தனிஷ்க் நகைக்கடையின் புதிய கிளை திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கடையில் நவ.12ம் தேதி 11.7 கிலோ எடைகொண்ட நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடை கட்டுமானப் பணியில் இருந்த பின்புறப் பகுதியைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்த குற்றவாளி, கண்ணாடிப் பெட்டிகளை உடைக்காமல் நகைகளை எடுத்துச் சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிய போலீசார் இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி, அவரது தந்தை, அவரது ஆண் யூடியூபர் நண்பர் நிஷாந்த் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் மீனாட்சி புது வீடு கட்டிவரும் நிலையில், பணத்தேவைக்காக அவரது நண்பர் நிஷாந்த் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து மீனாட்சியிடமிருந்து 5.5 கிலோ நகைகளையும், கோபாலிபுரம் பகுதியில் உள்ள ஒரு குன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.2 கிலோ நகை என கொள்ளையடிக்க நகைகள் முழுமையாக மீட்கப்பட்டன.
தொடர்ந்து நிஷாந்திடம் போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இன்று நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மற்ற இருவருக்கும் நவ.29 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.