வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்- நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது

947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28-ந்தேதி வரை காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்- நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்கிறது
Published on

சென்னை:

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024 அன்று வெளியிடப்பட்டது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பெயர் மற்றும் குடும்பத்தினர் பெயர் விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா? என்பதை சரிபார்த்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் போன்றவற்றை வாக்காளர்கள் மேற்கொள்வதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) மற்றும் 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 947 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2025 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (1.1.2007-ந் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6 மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக்கொள்ளலாம்.

பெயர் நீக்கம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்கள், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய உரிய படிவத்தை பூர்த்தி செய்து அதற்கான ஆதாரத்தை இணைத்து அளிக்க வேண்டும்.

சிறப்பு முகாம் மட்டுமல்லாமல் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் 28-ந்தேதி வரை காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், http://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com