ஒட்டன்சத்திரத்தில் ஊராட்சிமன்ற தலைவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி

ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் காட்டுத் தீ போல் பரவியதால் ஆஸ்பத்திரி முன்பு உறவினர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊராட்சிமன்ற தலைவர் சக்திவேல்
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊராட்சிமன்ற தலைவர் சக்திவேல்
Published on

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசபிள்ளைபட்டி ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் சக்திவேல் (வயது 45). மாவட்டம் முழுவதும் நீர்நிலை, நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி அரசபிள்ளை பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி இன்று நடைபெறும் என்றும் இதற்காக ஆக்கிரமிப்பு செய்தவர்கள் உடனடியாக அதனை அகற்றி விட வேண்டும் எனவும் கடந்த 3 நாட்களாக ஒலிபெருக்கி மூலமும் துண்டு பிரசுரங்கள் கொடுத்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றும் பிரச்சினையில் ஒரு தரப்பினர் ஊராட்சி நிர்வாகத்துக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளனர். இதனால் இன்று ஆக்கிரமிப்பு அகற்றப்படும்போது ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சக்திவேல் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி நேற்று இரவு டி.எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு கார் கண் இமைக்கும் நேரத்தில் அவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளுடன் தூக்கி வீசப்பட்ட சக்திவேல் படுகாயமடைந்தார். உடனே காரில் வந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊராட்சி மன்ற தலைவரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் காட்டுத் தீ போல் பரவியதால் ஆஸ்பத்திரி முன்பு உறவினர்களும், பொதுமக்களும் அதிக அளவில் திரண்டனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்ளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com