களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

டேராடூன் பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘எக்கோலாஜிக்‘ எனப்படும் புதிய ஆண்ட்ராய்டு செயலி மூலம் மிகவும் துல்லியமாக புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
புலி
புலி
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் ஆண்டுதோறும் புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

தேசிய அளவில் புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இதுவரை தேசிய அளவில் 4 முறை புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு தேசிய அளவிலான கணக்கெடுப்பு 5-வது முறையாக இன்று களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் இன்று தொடங்கியது.

புலிகள் காப்பக இயக்குனர் செந்தில்குமார் மேற்பார்வையில், துணை இயக்குனர்கள் செண்பக பிரியா (அம்பை), ராமேஸ்வரன் (களக்காடு) ஆகியோர் நேரடி கண்காணிப்பில், வனச்சரகர்கள் மேற்பார்வையில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் உடன் சென்று புலிகள் கணக்கெடுப்பார்கள்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அம்பை வனச்சரகத்தில் 29 இடங்களிலும், களக்காடு வனச்சரகத்தில் 21 இடங்களிலும் மொத்தம் 50 இடங்களில் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். இன்று காலை தன்னார்வலர்களுக்கு எவ்வாறு புலிகள் கணக்கெடுக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி நடத்தப்பட்டு காட்டுக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்கள் வனப்பகுதியில் உள்ள வேட்டை தடுப்பு மையத்தில் தங்கி இருந்து கணக்கெடுக்கும் பணியை தொடங்கினர். நேரடியாக பார்ப்பதன் மூலமும், புலிகளின் எச்சம் - கால்தடங்கள் ஆகியவற்றின் மூலமும், வனப்பகுதிக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடனும் இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

வழக்கமாக புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி அந்தந்த ஊழியர்களின் குறிப்பு மூலம் கையேடுகள் பதிவு செய்யப்படும். ஆனால் தற்போது டேராடூன் பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘எக்கோலாஜிக்‘ எனப்படும் புதிய ஆண்ட்ராய்டு செயலி மூலம் மிகவும் துல்லியமாக புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.

இதில் தவறுகள் ஏற்பட பெரும்பாலும் வாய்ப்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது. இந்த நேரடி கணக்கெடுக்கும் பணி 8 நாட்கள் நடைபெறும். அதன் பின்னர் 25 நாட்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கணக்கிட்டு புலிகள் எண்ணிக்கை மற்ற மாமிச உண்ணிகளின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்படும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com