

சென்னை:
சென்னை பாடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றுபவர் சிவசங்கரி. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவர் இதுவரை 2 லட்சத்து 306 கொரோனா தடுப்பூசிகள் போட்டுள்ளார்.
இதேபோல் திருச்சி பீமன் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றும் தாரணி என்பவர் 3 லட்சத்து 2 ஆயிரத்து 5 தடுப்பூசிகள் செலுத்தி இருக்கிறார்.
தேசிய அளவில் சாதனை படைத்த இந்த இரண்டு நர்சுகளுக்கும் டெல்லியில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.
மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்ட லியா விருதுகளை வழங்கினார். சிவசங்கரி நேரில் சென்று விருதை பெற்றுக் கொண்டார். தாரணி செல்லவில்லை. அவர் சார்பில் பொது சுகாதாரதுறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் பெற்றுக்கொண்டார்.
சிவசங்கரி 30 ஆண்டுகளாக சுகாதாரத்துறையில் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பூசி அறிவிக்கப்பட்டதும் கடந்த 2021-ம் ஆண்டு முதல் தடுப்பூசி முகாம்களிலும் வீடு வீடாக சென்றும் ஊசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பலவகை தடுப்பூசிகளை செலுத்தி அனுபவம் இருப்பதால் கொரோனா தடுப்பூசி போட்டதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை” என்றார்.
அதேநேரம் முன் கள பணியாளராக கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டாலும் தனக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.
தடுப்பூசி போடுவதற்காக பொதுமக்களை கவுன்சிலிங் செய்து அழைத்து வந்தது மிகப்பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறினார்.