

அரசு டெண்டர்களில் இனி பினாமி நிறுவனங்களோ அல்லது ஒரு நிறுவனத்தின் ஆதிக்கமோ எதுவும் இருக்காது என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அனைத்திலும் சரியாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய போலியான அரசு கிடையாது. மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பு இல்லை. தண்ணீர் வசதி, மின்சார வசதி இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. ஆனால், முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமான தனியார் மருத்துவமனையில் எல்லா வசதிகளும் இருக்கின்றன.
ஒரு மருத்துவமனை கட்டினால் 50 வருடங்களுக்கு அப்படியே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கட்டிடம் கட்ட உள்ளோம். இனி கலெக்டர் அலுவலகம், மருத்துவமனை போன்ற கட்டிடங்களை G + 14 அல்லது G + 10 ஆகக் கட்ட வேண்டும் என்று சொல்லியுள்ளோம்.
அடுத்த 75 வருடங்களுக்கான கட்டிடமாக அரசு கட்டிடம் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற தரத்துடன் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். தொட்ட உடனேயே சிமெண்ட் விழும் அளவுக்கு அரசு கட்டடம் கட்ட மாட்டோம்.
அடுத்த 2 ஆண்டுகளில் பள்ளிகள், சமூகநீதித் துறை விடுதிகள், மருத்துவமனைகள் என அனைத்தையும் சரிசெய்ய உள்ளோம். அரசு துறை சார்ந்த டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்தோம்.
கடந்த காலங்களில் அமைச்சர்களின் பினாமி நிறுவனங்கள் நிறைய டெண்டர்களை எடுத்துள்ளன. இது குறித்து புகார் அளித்துள்ளோம்.
தற்போதைய ஆட்சியில் ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் என்றெல்லாம் இருக்காது. ஒரு திட்டம் தொடங்கப்படும்போது, குறிப்பிட்ட காலத்தில் முடிக்காத சம்பந்தப்பட்ட டெண்டர் நிறுவனங்களை கருப்புப் பட்டியலில் வைக்க உள்ளோம். அவர்கள் டெண்டரில் பங்கேற்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்.
தேர்தல் நடைபெறுவதற்கு ஓராண்டுக்கு முன்னர், அதாவது 2025-ம் ஆண்டு மட்டும் நெடுஞ்சாலைத் துறையில் சாலைகளில் உள்ள பள்ளங்களை மூடுவது போன்ற Patch Work பணிகளுக்காக ரூ.2,200 கோடி ஒதுக்கி ஊழல் செய்துள்ளனர்.
5,626 பள்ளிகள் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ளன. அதில்தான் 80% ஊழல் நடந்துள்ளது 5,626 பள்ளிகளை ஆய்வு செய்து தரவுகளை எடுத்துள்ளோம்; இப்பள்ளிகளில் 15,661 கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன இது 20 ஆண்டுகாலப் பிரச்னை; அடுத்த 2 ஆண்டுகளில் இதை சரி செய்ய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.